ஞாயிறு, 13 ஜனவரி, 2013

ஆபத்தான கலாச்சாரம்.....!



நம் இந்திய கலாச்சாரம் பிற நாட்டினரும் பார்த்து பொறாமை பட கூடிய அளவில் தான் இருந்தது சிறிது காலம் வரை....!? அதிலும் முக்கியமாக நமது திருமண முறை, பல ஜாதி, மதத்தினர் இருந்தாலும் அவர்களுக்கு தகுந்த மாதிரியான சம்பிராதயங்கள்,  கட்டுபாடுகள், கலாச்சாரங்கள் என்று மிகவும்  நல்ல முறையில் அமைந்திருந்தது.'புனிதம்' என்று இன்று வரை நினைத்து மதித்து கொண்டிருந்த ஒரு பண்பாடு இப்போது வேறு விதமாக போய் கொண்டிருக்கிறது....!!?

ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான திருமண வழக்கங்கள். மோதிரம், தாலி என்று எந்த முறையில் நடந்தாலும் எல்லா திருமணங்களும் பதிவு செய்ய பட்டுதான் வருகிறது, அதுவே கணவன், மனைவி இருவருக்கும் ஒரு சமூதாய அங்கீகாரமாகும்.  அதுவே முறையான திருமணமாக இருக்கிறது .எல்லாவற்றிலும் மேலை நாட்டினரை பார்த்து முன்னேறி (பின்னேறி) பழகி போன சிலரால் ஒரு புது கலாச்சாரத்தையும் பின்பற்றுவது என்பதும்  சரியானதாகவே தான் தெரிகிறது போலும். 

அப்படிப்பட்ட ஒரு புது கலாசாரம் தான் LIVING TOGETHER  என்று சொல்லகூடிய ஒன்று.  மனதிற்கு பிடித்த ஆண், பெண் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்வது....!!எப்போது இருவருக்கும் ஒத்து போகவில்லையோ அப்போதே பரஸ்பரம் பேசி  'இனி நண்பர்களாக மட்டும் இருப்போம்' என்று சொல்லி பிரிவது....?! இது என்ன கொடுமைங்க...!!? சென்னை போன்ற பெரிய நகரங்களில் இந்த கலாசாரம் பரவி கொண்டிருக்கிறது என்பதை பத்திரிக்கைகளின் மூலம் தெரிந்து அதிர்ச்சியாகிவிட்டது.

ஒருவேளை  இந்த மாதிரியான வாழ்க்கையில் தவறி குழந்தை ஏதும் பிறந்து விட்டால், பிரிந்த பின் அந்த குழந்தையை என்ன செய்வார்கள்....! ஏதும் பிரச்னை என்றால் உதவிக்கு யாரிடம் செல்வார்கள்....?! இது எந்த அளவுக்கு  அந்த பெண்ணிற்கு பாதுகாப்பை கொடுக்கும்......? அல்லது எதுவரை...??! முறையான திருமணம் முடித்த  கணவன் மனைவி இருவருக்கும் இடையில் பிரச்னை என்றால் வீட்டு பெரியவர்கள் பேசி தீர்த்து வைப்பார்கள், அல்லது முடியாத பட்சத்தில் போலீஸ் ஸ்டேஷன், அதையும் மீறி போனால் கோர்ட்  உதவியை  நாடுவார்கள்.

ஆனால் இது எதை பற்றியும் ஒரு கவலை இல்லாமல் படித்து நல்ல வேலையில் இருக்கும் நாகரீகமானவர்களிடம் இத்தகைய புதிய கலாசாரம் இப்போது வேகமாக பரவிக்கொண்டு வருகிறது.  இது மிகவும் ஆபத்தான, அதே சமயம் வருத்தப்பட கூடிய ஒரு நிகழ்வு.

இந்த முறையானது 'நமது கலாசாரத்திற்கு களங்கம் கற்பிக்கும்' என்று சிலர் கொதிக்கும் அதே நேரம், இந்த மாதிரியான சீர் கேட்டையும்  'தனி மனித சுதந்திரம்' என்று சப்பை கட்டு கட்டி விதண்டாவாதம் செய்கிறார்கள் வேறு சிலர்.

இப்படி பட்ட ஒரு முறை தவறு என்றே உச்சநீதிமன்றம் சமீபத்தில் கூறி உள்ளது. இந்த மாதிரி சேர்ந்து வாழ்பவர்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு இல்லை. மேலும் இந்த மாதிரி வாழ்பவர்களுக்கு ஏதும் பிரச்சனை என்றால் கோர்டில் வழக்கு தொடர்ந்தாலும் செல்லுபடியாகாது. மேலும் குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் இந்த மாதிரியான உறவுகள் வராது என்றும் திடமாக தீர்ப்பு அளித்துவிட்டனர்.  இந்த தீர்ப்பு தான் இப்போது நம்மவர்களின் பொழுது போக்கு நேர பேச்சே....!

எது கலாசாரம்...?

இனி வரும் தலைமுறையினர் பண்பாடு  , கலாசாரம்னு சொல்றங்களே அப்படினா என்ன என்று கேட்க கூடிய நிலையில் இருப்பது வருத்தம் தான்.  பெரியவர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு படிப்பை கற்க வைப்பதுடன் மட்டும் நின்றுவிடாமல், ஒழுக்கம், பண்பாடு, விருந்தோம்பல் பண்பு, நம் கலாசாரம் போன்றவற்றையும் சொல்லி கொடுக்க வேண்டும். (இதை கற்று கொடுக்க ஏதாவது கோச்சிங் சென்ட்டர் இருந்தா தேவலை....?!!) நம் வீட்டில் கல்லூரி செல்லும் பிள்ளைகளோ, அல்லது வேலைக்கு சென்று கை நிறைய சம்பாதிக்கும் பிள்ளைகளோ  இருந்தால் இனியாவது அவர்கள் மேல் ஒரு கண் வைத்து கவனியுங்கள்....சொல்லமுடியாது உங்கள் பிள்ளை வீட்டுக்கு வெளியே ஒரு வீட்டை ரெடி செய்து குடும்பம் நடத்தி கொண்டிருக்கலாம்...!?? (உண்மையை சொல்றேங்க...!?) 

யோசியுங்கள் பெற்றோர்களே !

பிள்ளைகள் இப்படி செய்வதற்கு பெற்றோர்கள்  எப்படி காரணமாவார்கள் என்று நினைக்ககூடாது. வீட்டில் கிடைக்காத  அன்பு, அரவணைப்பு, பாசம் இந்த மாதிரியான முறையில் கிடைக்கலாம் என்று போகலாம்...! மேலும் இது  முழுவதும் உடல் தேவைக்காக மட்டும் தான்  என்று ஒதுக்கி விடமுடியாது. அதற்கு வேறு வழிகள் இருக்கின்றன. எல்லோரின் மனதுமே  ஒரு சின்ன அங்கீகாரம், ஆதரவாய் சாய ஒரு தோள், அன்பாய் தலை வருட ஒரு கரம், நிம்மதியாய் உறங்க ஒரு மடி இவற்றுக்காக தான் ஏங்குகிறது என்று கருதுகிறேன்..... இல்லை என்று யாரும் மறுக்க முடியாது  அல்லவா  ....?!

இதை தேடித்தான் ஓடுகிறார்கள், அவர்களாகவே இப்படி ஒன்றை ஏற்படுத்தி நிம்மதி, சந்தோசம் காண முயலுகிறார்கள், அவசர முடிவு   என்று தாமதமாக உணர்ந்து அதில் இருந்து அதே அவசரமாக விடுபடுகிறார்கள்....ஆனால் பிரச்சனை அத்துடன் முடிந்து விடுவதில்லை....பழகிய நாட்களின் எண்ணங்களில் இருந்து அவர்களால் முழுதும் விடுபட இயலாது.....விளைவு குற்ற உணர்ச்சி, ஏமாற்றம், வேதனை கடைசியில் மன அழுத்தத்தில் கொண்டு போய் விட்டு விடுகிறது.....!!? என்ன படிச்சி, என்ன சம்பாதித்து என்ன பலன்....இனி வாழ்க்கையின் பக்கங்கள் அனைத்தும் வெறும் வெள்ளை காகிதம் போன்றது தான்....!?        

என்ன முடிவு...?

மற்ற மாநிலத்தவர்களை விடுங்கள்...தமிழர்களுக்கு என்று பெரிய பாரம்பரிய கலாசாரம் இருக்கிறது. அதை எல்லாம் மறந்து போக போய்தான் இந்த மாதிரி சீர்கேடான  புது நாகரீகம் தலையெடுக்க தொடங்கிவிட்டது. என்ன செய்து இதனை நிறுத்த போகிறோம் அல்லது தடுக்க போகிறோம்...? நாடு முழுவதும் யோசிக்க வேண்டிய சர்ச்சைக்குரிய  ஒரு விஷயம் இது. பல பட்டிமன்றங்கள் கூட நடை பெறலாம், இப்படி சேர்ந்து வாழ்வதை சட்ட பூர்வமாக அங்கீகரிக்க வேண்டுமா அல்லது தடுத்து நிறுத்த
வேண்டுமா என்று ...??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக