ஞாயிறு, 13 ஜனவரி, 2013

செல்போனில் எப்படி பேசுவது ?



>> செல்போன் நமது வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு.  நகரம் தொடங்கி குக்கிராமம் வரை செல்போன் இல்லாத வீடே இல்லை என்று சொல்லும் அளவிற்கு ஆகிவிட்டது,  அவசியமான ஒன்றுதான்  என்பதில் சந்தேகம் இல்லை. வெளியே கிளம்பும் போது money purse எடுக்கிறோமோ இல்லையோ முதலில் போன் ஐ தான் எடுப்போம


ஆனால் செல்போன் ஐ எந்த இடத்தில் எப்படி பயன் படுத்துகிறோம் என்பதை வைத்துதான் அது இன்பமா, இம்சையா என்று சொல்ல முடியும்.


நாம் பஸ்சில் போகும்போது பல செல்போன்களின் ஒலியை கேட்கலாம். மிக ஒரு சிலரே போன்ஐ எடுத்து 'நான் பிரயாணத்தில் இருக்கிறேன், அப்புறம் கால் பண்றேன்னு' சொல்லிட்டு வச்சிடுறாங்க.   ஆனால் சிலர் இருக்காங்களே,  அவங்களை எந்த லிஸ்டில் சேர்ப்பது என்றே தெரியவில்லை.  அப்போதுதான் பேச நேரம் கிடைத்தது மாதிரி வளவளனு பேசிட்டே இருப்பாங்க,  தங்களை சுற்றி பலர்  இருக்காங்களே, அவங்களுக்கு தொந்தரவாக இருக்காதா அப்படி எல்லாம் யோசிப்பதே இல்லை.


அதைவிட கொடுமை என்னன்னா பஸ்சின் சத்தத்தில எங்கே நம்ம குரல் எடுபடாம போயிடுமோனு, வேற தொண்டை  கிழிய கத்துறது......   சில நேரம் காது கூசகூடிய வார்த்தைகளும் வந்து விழும்.....  பக்கத்தில பெண்கள் இருக்கிறாங்கனுகூட பார்ப்பது இல்லை,   அரசியல்வாதி கையில மைக் கிடைச்சமாதிரி nonstop ஆக போய்ட்டே இருக்கும் .


சமீபத்தில ஒரு பெண்மணி தனது நாத்தனாரை பற்றி தனது மற்றொரு உறவினரிடம் குறை சொல்லி சரியாக 15 நிமிடம் மூச்சு விடாம பேசினாங்க......  அவங்க வீட்டல எத்தனை பேர், என்ன வேலை பார்கிறாங்க,  அவங்க வசதி எப்படி என்பது எல்லாம் இப்ப எனக்கு அத்துபடின்னா பார்த்துகோங்க,  அந்தம்மா எவ்வளவு விவரமா பேசி இருப்பாங்க  என்று....!  இடையில சில அசிங்கமான வார்த்தைகள் வேறு!!


பொது  இடத்தில சிகரெட் பிடிக்ககூடாது என்று சட்டம் போட்ட மாதிரி பொது  இடத்தில செல்போன் பேசக்கூடாது என்று சட்டம் போட்டாலும் தேவலாம் என்று தோணுது.  அந்தளவுக்கு அநாகரீகம்.......


சிலர் நான் பாங்க்க்கு பணம் எடுக்கத்தான் போறேன் அப்படீன்ற மாதிரி மிக தெளிவா பேசினா என்னவாகும்,  திருடனை வா என்று கூப்பிடுவது போல் இருக்கும்.  மேலும் பெண்கள் குடும்ப விசயங்களை வெளியில் பேசுவதால் பல தொல்லைகளை சந்திக்க வேண்டிஇருக்கும்.  வித விதமா  எப்படி ஏமாத்துவது என்பதில் பலர் டாக்டர் பட்டமே வாங்கி இருக்காங்க என்பதை நாம் மறந்து விட கூடாது.


செல்போன் வந்ததால் பேசிகொண்டே ரயிலை கவனிக்காமல் தண்டவாளத்தை கடந்ததால் ரயில் மோதி இறந்த இளம்பெண்ணை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்கமுடியாது.....


பஸ், ரயிலில் போகும் போது அவசியம் ஏற்பட்டால் தவிர செல்போனில் பேசுவதை தவிர்ப்பது நலம். அப்படியே பேசினாலும் மெதுவான குரலில் ஓரிரு வார்த்தைகளுடன் முடித்துக் கொள்வது நலம்.  எங்கும் எப்போதும் நம் அந்தரங்கம் காக்கப்படவேண்டும்.


பொது இடத்தில் இருக்கும் போது செல்போன் அழைப்பு வந்தால் ஒரு நொடி தாமதித்து முக்கியமான போன் என்றால் மட்டுமே பேசவேண்டும். நம்மை பலர் உற்று நோக்குகிறார்கள் என்ற உணர்வு எப்போதும் இருந்தால் நல்லது.  வார்த்தைகளும் மெதுவாக வரும், விரைவாகவும் பேசி முடிப்போம்.


பிறரை விட காதலர்கள் ஓரளவு பரவாஇல்லை,  அடுத்தவர்கள் கேட்டுவிட கூடாது என்று வாயை கையால் மூடிக்கொண்டு பேசுகிறார்கள்....! அவர்களின் கண்களுக்கு மட்டும்தான் அருகில் இருப்பவர்கள் தெரிகிறார்கள் போல.....!!  ஆனால் மற்றவர்களின் கண்களுக்கு........!?
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக